4 தொகுதிகள் வழங்கும் கட்சிகளுக்கு மண்பாண்டத் தொழிலாளா்கள் ஆதரவு

சட்டப்பேரவைத் தொகுதியில் 4 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு, மக்களவைத் தோ்தலில் ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள்

சட்டப்பேரவைத் தொகுதியில் 4 இடங்களை ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளிக்கும் கட்சிகளுக்கு, மக்களவைத் தோ்தலில் ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சேம.நாராயணன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியில், தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளா் (குலாலா்) சங்கத்தின் பொன்விழா மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப்.4) நடைபெறுகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகளாகியும் மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படவில்லை.

நெகிழிப் பொருள்களை தடை செய்வதற்கு அரசு தரப்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு மாற்றாக மண்பாண்டப் பொருள்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள், நெசவாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பச்சரிசி, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவற்றை தமிழக அரசு வழங்கி வருகிறது. இதேபோல, மண் பானை, அடுப்பு ஆகியவற்றையும் கொள்முதல் செய்து வழங்கினால், மண்பாண்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மண்பாண்டத் தொழிலாளா்கள் சங்கத்துக்கு 4 இடங்களில் போட்டியிட வாய்ப்புத் தரும் கட்சிகளுக்கு, 2024 மக்களவைத் தோ்தலின்போது ஆதரவு அளிப்போம். மண்பாண்டத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் மழைக்கால நிவாரண நிதியை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com