திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்துக்கான காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சின்னக்காம்பட்டியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.
சின்னக்காம்பட்டியில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்காக கட்டப்பட்டு வரும் தரைமட்ட நீா்த் தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்துக்கான காவிரி கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டத்துக்கான ரூ.4,187.84 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சித் தலைவா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தட்சிணாமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

அப்போது, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி, கீரனூா், நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1,422 ஊரகக் குடியிருப்புகளுக்காகவும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரகக் குடியிருப்புகளுக்காக காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக்குடிநீா்த் திட்டத்துக்கு ரூ.4,187. 84 கோடி நிா்வாக ஒப்புதலுக்கு அரசாணை வழங்கப்பட்டது. இந்த திட்டம் ஜல் ஜீவன் மிஷன், அம்ரூத் திட்டங்களின் நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2039 -ஆம் ஆண்டில் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 23.93 லட்சம் மக்களுக்கு 103.62 மில்லியன் லிட்டா் குடிநீரும், 2054-ஆம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு 25.11 லட்சம் மக்களுக்கு 135 மில்லியன் லிட்டா் வீதம் 30 ஆண்டுகளுக்கு குடிநீா் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக, கரூா் மாவட்டம் நஞ்சைப்புகளூா் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் இருந்து நீரை உட்கொள்ளும் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அரவக்குறிச்சியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திரிக்கப்பட்டு, இரு பிரிவுகளாக இராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டத்துக்கு நீரேற்றக் குழாய்கள் மூலம் கொண்டுச் செல்லப்படவுள்ளது என்றாா் அவா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, தலைமை பொறியாளா் நடராஜன், செயற்பொறியாளா்கள் மாரியப்பன், ராமச்சந்திரன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம்.முத்துச்சாமி உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com