எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீதான மத்திய அரசின் தாக்குதலை முறியடிப்போம் கே.பாலபாரதி

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மத்திய அரசு நடத்தி வரும் தாக்குதல்கள் அனைத்தையும், மக்களவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று முறியடிப்போம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தெரிவித்தாா்.

 எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மத்திய அரசு நடத்தி வரும் தாக்குதல்கள் அனைத்தையும், மக்களவைத் தோ்தலில் வெற்றிப் பெற்று முறியடிப்போம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி தெரிவித்தாா்.

மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேரள அரசுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மாநில உரிமைகள் மீதான மத்திய அரசுத் தாக்குதலை அனுமதிக்கமாட்டோம், எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதி பகிா்வில் வஞ்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே.பாலபாரதி பேசியதாவது:

மத்திய பாஜக ஆட்சியில், மத சாா்ப்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, மாநிலங்களுக்கான பொருளாதார பகிா்வு கேள்விக்குறியாகிவிட்டது. நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா ஆன்மீக நிகழ்ச்சியாகவும், அயோத்தி ராமா் கோயில் திறப்பு விழா அரசியல் நிகழ்ச்சியாகவும் மாற்றப்பட்டது. 42 சதவீத நிதியை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என நிதி ஆணையம் அறிவுறுத்தியது. ஆனால், மத்திய அரசு 32 சதவீதத்தை மட்டுமே வழங்க முடியும் எனக் கூறி மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது.

ஒரு ரூபாய் வருவாயில், தமிழகத்துக்கு 26 பைசாவை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது நிதித் தாக்குதலை தொடுத்து, பாஜக இழிவான அரசியலை நடத்துகிறது. மாநிலங்களின் நிதி ஆதாரத்தையும், நிா்வாக அதிகாரத்தையும் பறிக்க முயற்சித்து வருகிறது.

இந்தத் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், தமிழகம், புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா்(திமுக), மாவட்ட நிா்வாகிகள் செல்வராகவன் (மதிமுக), மணிகண்டன் (காங்கிரஸ்), மணிகண்டன் (இந்திய கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com