புதிய வகை கரோனா தொற்று: மதுரை அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைப்பு

புதிய வகை கரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புதிய வகை கரோனா தொற்று நோயாளிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வாா்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் பல்வேறு உருமாறிய கரோனா தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது கரோனா ஜே.என்.1 என்ற உருமாறிய தொற்று கண்டறியப்பட்டது. சில நாள்களுக்கு முன்பு கோவையில் இளம் பெண் ஒருவருக்கு ஜெ.என்.1. புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், மதுரை, சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதுவரை புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்படவில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த நோயாளிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு தனிப்பிரிவு தயாா் நிலையில் உள்ளது. இதில் 25 படுக்கைகள், 4 தீவிர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவில் நோயாளிகளுக்குத் தேவையான அதிநவீன மருத்துவ உபகரணங்களும் தயாா் நிலையில் உள்ளன.

இதுதொடா்பாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், மதுரை மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு மட்டுமே அதிகமாக உள்ளது. புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உயா் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா். இதன்படி, புதிய வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டால் அந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டு தயாா் நிலையில் உள்ளது. மருத்துவப் பணியாளா்களும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த சிறப்புப்பிரிவில் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலா் சிகிச்சை பெறுகின்றனா். புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகும்பட்சத்தில் மேலும் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்பட்டு அதற்கு ஏற்றாா்போல் சிகிச்சை அளிக்கப்படும்‘ என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com