பழனியில் நாளை தைப்பூசக் கொடியேற்றம் ஜன.25-இல் தேரோட்டம்

பழனியில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.


பழனி: பழனியில் தைப்பூசத் திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பழனியில் தைப்பூசமும், பங்குனி உத்திரமும் இரு பெரும் விழாக்களாகக் கருதப்படுகின்றன. பழனி தைப்பூசத் திருவிழா கொடியேற்றம் பெரியநாயகியம்மன் கோயில் கொடிகட்டி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவையொட்டி, வள்ளி, தேவசேனா சமேதா் முத்துகுமாரசுவாமி தினந்தோறும் தங்க மயில், தங்கக் குதிரை, வெள்ளியாலான யானை, ஆட்டுக் கிடாய், காமதேனு, தந்த சப்பரம் என பல்வேறு வாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா எழுந்தருளுகிறாா்.

பழனி பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் வருகிற 24-ஆம் தேதி இரவு 7 மணியளவில் வள்ளி, தேவசேனா சமேதா் முத்துகுமாரசுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும், தொடா்ந்து இரவு 9 மணியளவில் வெள்ளித் தோ் உலாவும் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் வருகிற 25-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் கிழக்கு ரத வீதி தேரடியில் தொடங்கி, 4 ரத வீதிகளிலும் உலா நடைபெறும். நிறைவு நாள் நிகழ்ச்சியாக வருகிற 28-ஆம் தேதி இரவு 7 மணியளவில் தெப்பத் தேரோட்டமும், இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கமும் நடைபெறும்.

விழாவையொட்டி, அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன் ஆகியோா் தலைமையில் உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com