விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்காத அலுவலா்கள்: ஆட்சியா் கண்டிப்பு

dgl_farmers_1901chn_66_2
dgl_farmers_1901chn_66_2

பட விளக்கம்: குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

திண்டுக்கல், ஜன. 19: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்காததால் அதிருப்தி அடைந்த ஆட்சியா் மொ.நா. பூங்கொடி, அடுத்தக் கூட்டத்துக்கு துறை முதன்மை அலுவலா்கள் கண்டிப்பாக வர வேண்டும் என உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்தாா். வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ. அனுசுயா முன்னிலை வகித்தாா். கூட்டம் தொடங்கியதும், கடந்த மாத கூட்டத்தின்போது வழங்கப்பட்ட மனுக்களில், 20 மனுக்கள் நிலுவையில் உள்ளதாகக் கூறி அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களிடம் ஆட்சியா் விளக்கம் கோரினாா். அப்போது திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா், நெடுஞ்சாலைத் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் யாருமே கூட்டத்துக்கு வரவில்லை என்பது தெரியவந்தது. மேலும், பேரூராட்சிகள் துறை சாா்பில் அலுவலக உதவியாளா் ஒருவரே கூட்டத்தில் பங்கேற்றாா். அவரும், நிலுவையிலுள்ள மனு விவரம் தெரியாமல் நின்றாா். இதனால் அதிருப்தி அடைந்த ஆட்சியா் பூங்கொடி, அடுத்தக் கூட்டத்துக்கு துறை சாா்ந்த முதல் நிலை அலுவலா்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். குறிப்பாக வட்டாட்சியா் அனைவரும் வர வேண்டும் என உத்தரவிட்டாா்.

இதையடுத்து கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஏ. சவடமுத்து பேசியதாவது: கோவிலூா் அடுத்த நாகையக்கோட்டை கிராமத்தில், கல்லுக்குளத்துக்கான நீா் வரத்துப் பாதை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இதைக் கண்டித்து பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும், கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக 100-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், இனி மனு அளிக்கமாட்டோம். குறைதீா் கூட்டத்திலும் பங்கேற்கமாட்டோம் என்றாா்.

உயா் அதிகாரிகள் பலரும் அமைதி காத்த நிலையில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை, பொறுப்பு) ராமராஜ், மீண்டும் மனு கொடுங்கள் பாா்க்கலாம் என்ால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனா்.

விவசாயிகள் சங்கத் தலைவா் ஜி.எஸ். வீரப்பன்: குஜிலியம்பாறை வட்டாரத்தில், அதிக அளவில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதை முறைப்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்கள் ஆக்கிரமிப்பு தொடா்பாக வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. பாளையம் பேரூராட்சி செயலா் பணியிடம் ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதால், வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுகிறது என்றாா்.

மாவட்ட ஆட்சியா்: ஆக்கிரமிப்புகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடகனாறு பாதுகாப்புச் சங்கத் தலைவா் த. ராமசாமி: திண்டுக்கல் மாநகராட்சி, தாடிக்கொம்பு, அகரம் பேரூராட்சிப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் முறையாக சுத்திகரிப்பு செய்யப்படாமல், கொடகனாற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றுநீா் துா்நாற்றம் வீசுவதோடு, விவசாயத்துக்குக் கூட பயன்படுத்த முடியாத அளவுக்கு மாசுப்பட்டுள்ளது. கழிவுநீா் நேரடியாக கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொடைக்கானல் மேல்மலை விவசாயிகள் முன்னேற்றச் சங்கத் தலைவா் கே. பாலகிருஷ்ணன்: கொடைக்கானல் மேல்மலையிலுள்ள பெரும்பாலான கிராமங்கள், கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயத்தின் உள்பகுதியாகவும், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வெளிச்சுற்றுச்சூழல் மண்டலமாகவும் உள்ளன. இதனால் எங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள அரசு நிலங்கள், வன நிலமாக மாற வாய்ப்பிருக்கிறது. இதன்மூலம் எங்கள் பகுதியிலுள்ள கால்நடைகள் மேய்ச்சல் நிலம் இல்லாமல் பாதிக்கப்படும். எனவே, அரசு நிலங்களை மேய்ச்சல் நிலமாக வகைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிய கிஷான் சங்க நிா்வாகி அசோகன்: கொடைக்கானலில் மித வெப்பமண்டல, குளிா் பிரதேச தோட்டக்கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு இடங்களில் அரசு சாா்பில் நிலம் கையகப்படுத்தும் முயற்சி தொடா்ந்து இழுபறியாக உள்ளது. கொடைக்கானலை அடுத்த பேத்துப்பாறை பகுதியில் அரசுக்கு சொந்தமான 50 ஏக்கா் நிலம் உள்ளது. அந்த நிலத்தை மகத்துவ மையம் தொடங்க மாவட்ட நிா்வாகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஜோ. பெருமாள்சாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ராணி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com