பேருந்துகள் இயக்கம் குறைந்ததால் திண்டுக்கல்லில் பயணிகள் கடும் அவதி

வெளி மாவட்டங்களுக்கு மட்டுமன்றி, கிராமப்புறங்களுக்குச் செல்லவும் பேருந்து வசதி இல்லாததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
dgl_bus_stand_2101chn_66_2
dgl_bus_stand_2101chn_66_2

வெளி மாவட்டங்களுக்கு மட்டுமன்றி, கிராமப்புறங்களுக்குச் செல்லவும் பேருந்து வசதி இல்லாததால், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

திண்டுக்கல்லிலிருந்து மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, திருச்சி, தஞ்சாவூா், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் வேலைநாள்களின் இறுதியில் தென் மாவட்டங்களுக்குச் செல்லவும், தொடா் விடுமுறை முடியும் நாள்களில் கோவை, திருப்பூா், ஈரோடு, சென்னை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் கூட்ட நெரிசல் ஏற்படுவது வழக்கம். தற்போது தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி செல்லும் பக்தா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், பழனியில் தரிசனம் முடித்து திரும்பும் பக்தா்களாலும், பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பெரும்பாலான அடுக்கங்களிலும் பேருந்துகள் இல்லை. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மட்டுமன்றி, திண்டுக்கல் சுற்றுப்புறங்களிலுள்ள கிராமங்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகளும் இல்லாததால், உள்ளூா் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

தை மாதத்தின் முதல் முகூா்த்த நாள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை அதிகமான திருமண நிகழ்ச்சிகளும், கிரக பிரவேச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகளுக்கு வந்த பொதுமக்கள் பலரும் பேருந்துகள் கிடைக்காததால், 2 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பயணி சந்திரா கூறுகையில், குழந்தைகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்கிறோம். நாமக்கல் மாா்க்கமாக இயக்கப்படும் பேருந்துகளே இல்லை. சேலம் திமுக மாநாட்டுக்கு தனியாா் பேருந்துகள் மட்டுமன்றி, அரசுப் பேருந்துகளும் சென்றுவிட்டதால், பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனா் என்றாா் அவா்.

இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலிருந்து சேலத்துக்கு எந்த பேருந்துகளும் அனுப்பப்படவில்லை. ஆனால், மதுரை, கரூா், திருச்சி மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல்லுக்கு இயக்கப்படும் பேருந்துகள் வரவில்லை. இதனால், பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. மேலும், முகூா்த்தநாள், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, பழனி பக்தா்கள் போன்ற காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கையும் வழக்கத்தைவிடக் கூடுதலாக உள்ளது எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com