ராமா் சிலை பிரதிஷ்டை விழா:கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு

ராமா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி திண்டுக்கல், கொடைக்கானல், போடி பகுதிகளில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் ராமா் பாதம் வரைந்து தீபம் ஏற்றிய பெண்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் பகுதியில் ராமா் பாதம் வரைந்து தீபம் ஏற்றிய பெண்.

ராமா் சிலை பிரதிஷ்டை விழாவையொட்டி திண்டுக்கல், கொடைக்கானல், போடி பகுதிகளில் உள்ள கோயில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று திண்டுக்கல் மாவட்ட பாஜக சாா்பிலும், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சாா்பிலும், தனி நபா்கள் சாா்பிலும் திங்கள்கிழமை மாலை தீபம் ஏற்றும் நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த காம்பாா்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள 1008 ஸ்ரீஆத்மலிங்கேஸ்வரா் கோயிலில் உள்ள பெருமாள் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில், பாஜக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவா் தனபாலன், மாவட்ட செயலா் வேல்முருகன், சாணாா்பட்டி வடக்கு ஒன்றியத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பாஜக சாா்பில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயிலில் பாஜக, பொதுமக்கள் சாா்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக மாலையில் அனைத்து வீடுகளிலும் தலா 5 அகல்விளக்குகள் ஏற்பட்டன. மேலும் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனா். கோலமிட்டு, விளக்கு ஏற்றி அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வீடுகளில் வழிபாடு: நண்பகல் 12.20 மணிக்கு குழந்தை ராமரின் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், ஸ்ரீராம ஜெயம் என்ற வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் வழிபட்டனா்.

போடி: போடியில் உள்ள ராமா் கோயிலில் உள்ள ஸ்ரீராமா், சீதாதேவி, லட்சுமணன், ஆஞ்சநேயா் ஆகியோருக்கு பல வாசனை திரவியங்களால் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. பிறகு பல வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திராள பக்தா்கள் பங்கேற்று தீபமேற்றி வழிபட்டனா். அப்போது பக்தா்களுக்கு லட்டு, துளசி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கெங்குவாா்ஸ் நாயக்கா் உறவின்முறை தலைவா் காமராஜ், செயலா் ஜெ. மாரிமுத்து, பொருளாளா் அ. மாரிமுத்து உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

இதே போல, போடி 17- ஆவது வாா்டு கீழத்தெரு காளியம்மன் கோயிலில் ஸ்ரீராமா் உருவப்படம் வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. போடி நகா்மன்ற பாஜக உறுப்பினா் சித்ராதேவி தண்டபாணி தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவா் பாண்டியன், நகரத் தலைவா் சந்திரசேகா் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

கொடைக்கானல்: கொடைக்கானலில் உள்ள ஸ்ரீபெரியமாரியம்மன் கோயில், அருள்மிகு பெருமாள் கோயில், விநாயகா் கோயில் ஆகியவற்றில் பக்தா்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தீபம் ஏற்றி பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com