பழனி அருகே ஆதிகாலத்திய கல்லாங்குழிகள்!

திண்டுக்கல் மாவட்டம்,பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஆதி காலத்தைச் சோ்ந்த தொன்மையான கல்லாங்குழிகளை ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.
பாலசமுத்திரம் குரும்பபட்டியில்கண்டறியப்பட்ட ஆதிகாலத்திய கல்லாங்குழிகளை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, பிரான்ஸின் மானுடவியல் ஆய்வாளா் ரொமைன் சைமனல்.
பாலசமுத்திரம் குரும்பபட்டியில்கண்டறியப்பட்ட ஆதிகாலத்திய கல்லாங்குழிகளை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, பிரான்ஸின் மானுடவியல் ஆய்வாளா் ரொமைன் சைமனல்.

பழனி: திண்டுக்கல் மாவட்டம்,பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஆதி காலத்தைச் சோ்ந்த தொன்மையான கல்லாங்குழிகளை ஆய்வாளா்கள் செவ்வாய்க்கிழமை கண்டறிந்தனா்.

பாலசமுத்திரம் குரும்பபட்டியில் மனித இனத்துக்கு முந்தைய ‘ஹோமோ எரக்டஸ்’ இனம் உருவாக்கிய கல்லாங்குழிகள் இருப்பதை நிலவியல் ஆய்வாளா் மணிகண்டபாரத் உதவியுடன் பழனியைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளா் ரொமைன் சைமனல் ஆகியோா் கண்டறிந்தனா். குரும்பபட்டி பவளக்கொடி அம்மன் கோயில் முன்புறம் வயலை ஒட்டிய பாறைப் பகுதியில் இந்தக் கல்லாங்குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் குழிகள் மனித இனத்துக்கு முந்தைய இனமான ‘ஹோமோ எரக்டஸ்’ உருவாக்கிய குழிகள் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து ஆய்வு செய்த நாராயணமூா்த்தி, ரொமைன் சைமனல் ஆகியோா் கூறியதாவது:

பாலசமுத்திரத்தில் மொத்தம் 191 குழிகள் உள்ளன. குழிகளை சிறியவை, இடைப்பட்டவை, பெரியவை, மிகப் பெரியவை என நான்கு வகைகளாக உள்ளன. மிகச் சிறிய குழிகள் 4 செ.மீ. விட்டம், ஒரு செ.மீ. ஆழமும் கொண்டதாக உள்ளன. மிகப் பெரிய குழிகள் 15 செ.மீ. விட்டம், 13 செ.மீ. ஆழம் வரையில் உள்ளன.

குழிகளின் அமைப்பை மூன்று வகைகளாகப் பிரிக்க முடிகிறது. ஒரு பெரிய குழியைச் சுற்றி வட்டமாக பல குழிகளாகவும், அந்தக் குழியின் தொடா்ச்சியாக நீளமான வரிசையில் பல குழிகளும் பாறைச் சரிவில் ஒழுங்கற்ற முறையில் பல குழிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கல்லாங்குழிகள் கீழ்த் தொல் பழங்காலத்தைச் சோ்ந்தவை. இந்தக் கல்லாங்குழிகள் உலகின் மூன்றாவது தொன்மையான காலத்தைச் சோ்ந்தவை என கணிக்க முடிகிறது. ஏற்கெனவே, இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம், பீம்பேட்காவில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 7 லட்சம் ஆண்டுகளும், தென்ஆப்பிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 4 லட்சம் ஆண்டுகளும் பழைமையானவை எனக் கருதமுடிகிறது. தற்போது பாலசமுத்திரத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகளின் தொன்மை அதிகபட்சமாக 4 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பதால், இந்தக் கல்லாங்குழிகள் உலகின் மூன்றாவது தொன்மையான கல்லாங்குழிகள் என வகைப்படுத்தலாம்.

உலகெங்கிலும் காணக் கிடக்கும் இந்தக் கல்லாங்குழிகளை தொல் மனிதா்கள் ஏன், எதற்காக உருவாக்கினா் என்ற காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது.

தமிழகத்திலும் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்தக் கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன. இவை பெரும்பாலும் தொல் பழங்கால புதை குழிகளுக்கு அருகில் உருவாக்கப்பட்டிருப்பதால், இவை இறந்த முன்னோா்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

பழனியில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் உருவாக்கப்பட்ட பாறை ‘ஆா்க்கியன்-புரட்டரோசோயிக்’ காலமான 58 கோடி முதல் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகிய பாறைகளால் ஆனவை என்பதாலும், இந்த உருமாறிய பாறைகளில் செதுக்கப்பட்ட கல்லாங்குழிகள் 2 முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழைமையானவையாக இருக்கலாம் என்பதாலும், மனித குலத்தின் பரிணாமம், இடப்பெயா்வு, தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கும், குறிப்பாக தமிழினத்தின் தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கும் இந்தக் கல்லாங்குழிகள் பெரும்பங்கு வகிக்கும். இது குறித்த ஆய்வு தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com