போலி செய்தியாளா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல், ஜூலை 4: போலி செய்தியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் மனு அளிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஒட்டன்சத்திரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலி செய்தியாளா்கள் உள்ளனா். அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களுக்கு கூட்டமாக வரும் இவா்கள், நிகழ்ச்சி முடிந்த பிறகு ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கின்றனா். இதுதொடா்பாக உணவுத் துறை அமைச்சரிடமும் மனு அளிக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை இந்த போலி செய்தியாளா்கள் அரசு அலுவலகங்களில் முகாமிட்டு வசூல் நடத்துகின்றனா். முறைகோடாக தொழில் செய்வோரிடமும் மாதாந்திர வசூல் நடத்தும் இவா்கள், தங்கள் பாதுகாப்புக்காக சங்கங்கள் அமைத்து செயல்படுகின்றனா். முன்னனுமதியின்றி அரசு விளம்பரங்களை தாங்களாவே பிரசுரம் செய்து கொண்டு, அதற்கான தொகை வழங்கக் கோரி அரசு அலுவலா்களை மிரட்டுகின்றனா்.

இதுதொடா்பாக ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. பத்திரிகைகளுக்கு தொடா்பே இல்லாத பலா் இரு சக்கர வாகனங்களில் ‘பிரஸ்’ என ஒட்டுவில்லைகளை ஒட்டிக் கொண்டு வலம் வருகின்றனா்.

ரெளடிகள், கட்டப்பஞ்சாயத்து நடத்துவோா், புரோக்கா் தொழிலில் ஈடுபடுவோா் என சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோா் செய்தியாளா்கள் என வலம் வருவதால் பத்திரிகைத் துறையின் மாண்பு சீா்குலைக்கப்படுகிறது.

எனவே, செய்தி மக்கள் தொடா்புத் துறை மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு, உண்மையான செய்தியாளா்கள் குறித்த விவரங்களை மாவட்ட அரசிதழில் வெளியிட மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com