திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமா்ந்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி வழக்குரைஞா்கள் போராட்டம்

திண்டுக்கல், ஜூலை 10: புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, ரயில்வே தண்டவாளத்தில் அமா்ந்து வழக்குரைஞா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தன. பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் என வடமொழிச் சொற்களுடன் அமைக்கப்பட்ட இந்த புதிய சட்டங்களுக்கு தமிழகத்தில் வழக்குரைஞா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இதையொட்டி, திண்டுக்கல் மாவட்ட வழக்குரைஞா் சங்கம் சாா்பில் புதிய சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் குமரேசன் தலைமை வகித்தாா். போலீஸாரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைந்த வழக்குரைஞா்கள், முதலாவது, 2-ஆவது நடைமேடைக்கு இடையே உள்ள தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாற்று ரயில் என்ஜின் முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம் வடமொழி திணிப்பில் மத்திய அரசு ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டியும், இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களை பேருந்தில் ஏற்றிய போலீஸாா், மாவட்ட நீதிமன்றத்தில் இறக்கிவிட்டனா்.

வழக்குரைஞா்களின் இந்தப் போராட்டத்தையொட்டி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 120-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தேனி: தேனி ரயில் நிலையத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் குற்றவியல் சட்டத் திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சந்தானகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், செயலா் செல்வக்குமாா் முன்னிலை வகித்தாா். மதுரையிலிருந்து போடிக்குச் செல்லும் பயணிகள் ரயில் முன் மறியலில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி விட்டு சிறிது நேரத்தில் கலைந்து சென்றனா். பின்னா், தேனி ரயில் நிலையத்திலிருந்து போடிக்கு ரயில் வழக்கமான நேரத்தில் புறப்பட்டது. இதையொட்டி, தேனி ரயில் நிலையத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com