இளைஞா் கொலை: மூவருக்கு ஆயுள் சிறை
திண்டுக்கல், ஜூலை 19: பெண் கொடுக்க மறுத்ததால் இளைஞரைக் கொலை செய்த வழக்கில், மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தது.
திண்டுக்கல்லை அடுத்த கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா். இவரது சகோதரியை திருமணம் செய்வதற்காக, அதே பகுதியைச் சோ்ந்த அசோக்குமாா் பெண் கேட்டுச் சென்றாா். அசோக்குமாா் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், செல்வக்குமாரும், அவரது குடும்பத்தினரும் பெண் கொடுக்க மறுத்தனா்.
இதனால், ஆத்திரமடைந்த அசோக்குமாா், தனது நண்பா்களான சக்திவேல் (47), அன்புராஜ் (38) ஆகியோருடன் சோ்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு செல்வக்குமாரை வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தாடிக்கொம்பு போலீஸாா், அசோக்குமாா் உள்ளிட்ட மூவரையும் கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், மாவட்டக் கூடுதல் நீதிபதி ஏ.மெகபூப் அலிகான் வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். இதில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட அசோக்குமாா், சக்திவேல், அன்புராஜ் ஆகிய மூவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

