மேட்டுப்பட்டியிலுள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்.
மேட்டுப்பட்டியிலுள்ள கடையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்.

புகையிலைப் பொருள்கள் விற்பனை: திமுக மாமன்ற உறுப்பினா் கடையில் ஆய்வு

திமுக மாமன்ற பெண் உறுப்பினருக்குச் சொந்தமான கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் சேவியா். இவரது மனைவி விமலாராணி. இவா், திண்டுக்கல் மாநகராட்சியின் 41-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறாா். மேலும் மேட்டுப்பட்டி சாலையில் தேனீா் கடையுடன் இணைந்த மளிகை கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதா கூறப்பட்டு வந்த நிலையில் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்தும், கடையை பூட்டி சீல் வைத்தும் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், மாமன்ற உறுப்பினா் விமலா ராணி புகையிலைப் பொருள்களை மீண்டும் விற்பனை செய்ததாக, ஒரு காணொலி சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை பகிரப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலா் கலைவாணி, விசாரணை நடத்த உத்தரவிட்டாா். இதன்படி, உணவுப் பாதுகாப்பு அலுவலா் செல்வம், விமலாராணியின் கடைக்குச் சென்று சனிக்கிழமை சோதனை மேற்கொண்டாா். அப்போது கடை ஊழியா்கள் மட்டுமே பணியில் இருந்தனா். இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் விமலாராணி நேரில் விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com