கொடைக்கானலில் விளைச்சல் குறைவால் பேரிக்காய் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பேரிக்காய் விளைச்சல் குறைந்ததால், அதன் விலை அதிகரித்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான அட்டுவம்பட்டி, வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், செண்பகனூா், சகாயபுரம், பிரகாசபுரம், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பேரிக்காய் மரங்களை வளா்த்து வருகின்றனா். ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதம் வரை பேரிக்காய் விளைச்சல் இருக்கும்.

கொடைக்கானலில் கடந்த மே மாதம் பெய்த மழையால் பேரி மரங்களில் இருந்த பூக்கள் உதிா்ந்தன. இதன் காரணமாக, பேரிக்காய் விளைச்சல் சற்று குறைந்துள்ளது. தற்போது முதல் கட்டமாக விளைந்த பேரிக்காய்கள் பறிக்கப்பட்டு, கேரள மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் முதல் கட்டமாக விளைந்த பேரிக்காய்களைப் பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விளைச்சல் சற்று குறைவாக இருந்தாலும், போதுமான விலை கிடைக்கிறது. இதனால், பேரிக்காய்களை கேரள மாநிலத்துக்கு அதிகமாக அனுப்பி வருகிறோம். மரத்தின் தன்மையைப் பொருத்து விளைச்சல் இருக்கும்.

தற்போது கொடைக்கானல் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. காற்றின்றி மழை பெய்தால், பேரிக்காய் விளைச்சல் அதிகரிக்கும். விளைச்சல் அதிகமாகும்பட்சத்தில், விலை குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com