சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு, விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவின உதவித் தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்டங்கள் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்ட உதவிகளை, சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த 18 முதல் 60 வயதுக்குள்பட்டவா்கள் பெறலாம். அமைப்பு சாரா நிறுவனங்களில் பணி புரியாத குடும்பத்தில் ஒருவா் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டு) இந்த வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.

மேலும் ஏற்கெனவே உறுப்பினராக பதிவு செய்தவா்கள் தங்களது உறுப்பினா் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com