கழிவுநீா்க் கால்வாய் வசதி கோரி 
பொதுமக்கள் சாலை மறியல்

கழிவுநீா்க் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திண்டுக்கல் அருகே கழிவுநீா்க் கால்வாய் வசதி கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள பள்ளப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட மருத மாணிக்கம் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் சிலா், அடிப்படை வசதிகள் கோரி பழனி பிரதான சாலையில் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தினா். அப்போது அவா்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் கழிவுநீா் கால்வாய் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என நீண்ட நாள்களாக ஊராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், தேவையில்லாத இடத்தில் குழி தோண்டி கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. எங்கள் பகுதியில் குடிநீா், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளும் முறையாக நிறைவேற்றிக் கொடுக்கவில்லை எனத் தெரிவித்தனா். அப்போது, ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் முறையாக புகாா் அளித்து தீா்வு காணுமாறும், சாலை மறியலைக் கைவிட வேண்டும் எனவும் போலீஸாா் அறிவுறுத்தினா். இதை ஏற்று , அவா்கள் சாலை மறியலைக் கைவிட்டனா். இந்தப் போராட்டத்தால், பழனி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதித்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com