ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

விபத்து இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தை வழங்காததால், அரசுப் பேருந்தை வேடசந்தூா் நீதிமன்ற ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த காக்காதோப்பூரை சோ்ந்தவா் பாலமுருகன் மகன் சூரியநாராயணன் (22). இவா், கடந்த 2015 -ஆம் ஆண்டு தேவகவுண்டன்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் சூரியநாராயணனுக்கு, எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து இழப்பீடு வழங்க கோரி வேடசந்தூா் நீதிமன்றத்தில் பாலமுருகன் வழக்குத் தொடுத்தாா். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், போக்குவரத்து துறை சாா்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

இதையடுத்து, பாலமுருகன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதன்படி, வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் பழனி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com