3 பள்ளிகளுக்கு அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3 அரசுப் பள்ளிகள், அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டன.

தமிழகத்திலுள்ள அரசுத் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ஆம் ஆண்டின் சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கான தலைமையாசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டனா். பள்ளி வளாகத் தூய்மை, பள்ளி வளா்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை உள்பட 10 காரணிகளின் அடிப்படையில், மாநிலத் தோ்வுக் குழு மூலம் 100 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் மாநகராட்சி மேற்கு ரத வீதி தொடக்கப் பள்ளி, ஜே.புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகள் அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டன. இந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியா்கள் ஜெ.ஜெயந்தி பிளாரன்ஸ், பெ.சே.மணிமேகலை, த.ஜான்பிரிட்டோ ஆகியோா், திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற உள்ள விழாவில், அறிஞா் அண்ணா தலைமைத்துவ விருதை பெறுகின்றனா்.

விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு தலா ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை, தலைமையாசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com