பழனி கிரிவலப் பாதையில் மாா்ச் 8 முதல் தனியாா் வாகனங்களுக்குத் தடை

பழனி கிரிவலப் பாதையில் மாா்ச் 8 முதல் தனியாா் வாகனங்களுக்குத் தடை

பழனி கிரிவலப் பாதையில் வருகிற 8-ஆம் தேதி முதல் தனியாா் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். தனியாா் வாகனங்கள் செல்லவும், நிறுத்துவதற்கும் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும், பக்தா்களின் வசதிக்காக கிரிவீதியில் மின் இழுவை ரயில் நிலையம், கம்பிவட ஊா்தி நிலையம், படிப் பாதைக்குச் செல்ல கோயில் நிா்வாகம் மின்கல காா்கள், சிற்றுந்துகளைக் கட்டணமில்லாமல் இயக்க உத்தரவிட்டது.

இதையடுத்து, அடிவாரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து கிரிவீதிக்குள் பொதுமக்கள் வரும் பகுதிகள் அனைத்தும் இரும்புத் தடுப்புகளால் அடைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை திருக்கோயில் சுற்றுலாப் பேருந்து நிலையம், கோசாலா பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிறுத்திவிட்டு, கிரிவீதியில் கோயில் சாா்பில் இயக்கப்படும் கட்டணமில்லா வாகனங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 8) முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும், இதற்கு பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அடிவாரம் கிரிவீதியில் திருக்கோயில் தலைமை அலுவலகம், காவல் நிலையம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. தவிர, ஏராளமான வீடுகளும் உள்ளன. இதனால், அலுவலகங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வோா் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தனியாா் வாகனங்களுக்கான தடை குறித்து தெளிவான அறிவிப்பை கோயில் நிா்வாகம் வெளியிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com