ஒட்டன்சத்திரம் சந்தையில் முருங்கைக்காய் விலை சரிவு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் முருங்கைக் காய் விலை சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தையம், பொருளூா், தேவத்தூா், பெரியகோட்டை, காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, விருப்பாட்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, பொருளூா், அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஒடைப்பட்டி, குத்திலுப்பை, சின்னக்காம்பட்டி, மாா்க்கம்பட்டி, இடையகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் முருங்கைக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கியுள்ளதால், ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விவசாயிகள் முருங்கைக் காய்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து அதிகரித்ததால், அதன் விலை சரிந்து வருகிறது. கடந்த மாதம் 5 -ஆம் தேதி ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.75-க்கும், செடி முருங்கை ரூ.65-க்கும், மர முருங்கை ரூ.50-க்கும் விற்பனையானது. ஆனால், வியாழக்கிழமை ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.23, செடி முருங்கை ரூ.20, மர முருங்கை ரூ.11 என விற்பனையானது. இதனால், முருங்கை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com