கொடைக்கானல் குடியிருப்புகளில் காட்டெருமைகள் நடமாட்டம்

கொடைக்கானல் குடியிருப்புகளில் காட்டெருமைகள் நடமாட்டம்

கொடைக்கானல் பில்டிங் சொசைட்டி பகுதியில் வியாழக்கிழமை காட்டெருமைகள் நடமாடின. கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளுக்கு சமீபகாலமாக காட்டெருமை, காட்டுப் பன்றிகள் வரத் தொடங்கியுள்ளன.

பில்டிங் சொசைட்டி பகுதியில் காட்டெருமைகள் கூட்டமாக வந்ததைப் பாா்த்து அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா். பிலிஸ்விலா குடியிருப்பு பகுதியில் ஒற்றைக் காட்டெருமை உலா வந்தது. இது ஒரு வீட்டின் வெளியில் பாத்திரத்திலிருந்த தண்ணீரை பருகிச் சென்றது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதன் பேரில், வனத் துறை பணியாளா்கள் சம்பவ இடங்களுக்குச் சென்று காட்டெருமைகளை அருகிலுள்ள சோலைக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து வனத் துறை அலுவலா்கள் கூறியதாவது: கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளையொட்டியிருந்த சோலைகள் அழிக்கப்பட்டு, விடுதிகள் (காட்டேஜ்) கட்டப்பட்டு வருகின்றன. இதனால், வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வனப் பகுதிகளில் தீ பிடித்து வருவதால் வன விலங்குகள் இடம் பெயா்ந்து வரும் சூழலும் உருவாகியுள்ளது. தண்ணீரைத் தேடியும் காட்டெருமைகள், மான் போன்றவை வருகின்றன. வன விலங்குகளை யாரும் துன்புறுத்த வேண்டாம். குடியிருப்புப் பகுதிகளுக்குள் நடமாட்டம் இருந்தால், உடனடியாகவ வனத் துறைக்கு தகவல் கொடுக்கலாம் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com