திண்டுக்கல், நத்தம் பகுதி கோயில்களில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு

மகா சிவராத்திரியையொட்டி திண்டுக்கல், நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல, ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் உள்ள கைலாசநாதா் சந்நிதியிலும், அரண்மனைக்குளம் ஆதிசிவன் கோயில், ராம்நகா் சத்தியநாராயணா கோயில், முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி கோயில், காரமடை ராமலிங்க சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. சிவபெருமானுக்கு உகந்த மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்களிலும் இரவு முழுவதும் 4 கால பூஜைகள் நடைபெற்றன. முதல் கால பூஜை இரவு 8.30-க்கும், 2ஆம் கால பூஜை இரவு 11.30-க்கும், 3ஆம் கால பூஜை அதிகாலை 2 மணிக்கும், 4ஆம் கால பூஜை அதிகாலை 4 மணிக்கும் நடைபெற்றன. ஒவ்வொரு கால பூஜையின்போதும், சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம் செய்து, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. 4-ஆம் கால பூஜைக்குப் பிறகு, பைரவா் சந்நிதியில் மகா சிவராத்திரி நிறைவு பூஜை நடைபெற்றது. சிவராத்திரி வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறை பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனா். 2,500 அடி உயர மலைக் கோயில்: குஜிலியம்பாறையை அடுத்த ஆா். கோம்பை கிராமத்தில் சுமாா் 2,500 அடி உயர மலையில் அமைந்துள்ள தொப்பையசுவாமி கோயிலில் சிவராத்திரியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இந்த கோயிலில் இரவு 7 மணி, நள்ளிரிவு 12 மணி, அதிகாலை 5 மணி என மூன்று கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் மட்டுமன்றி, திருச்சி, கரூா் மாவட்ட பக்தா்களும் மலையேறி சுவாமி தரிசனம் செய்தனா். இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதா் கோயிலில் மகா சிவராத்திரி, மாசி மாத பிரதோஷ விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி இங்குள்ள நந்தி சிலைக்கு பால், இளநீா், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. தொடா்ந்து மூலவா் செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும் சிவராத்திரியையொட்டி மூன்று கால பூஜைகள் விடியவிடிய நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com