திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.10,700 கோடி திட்டப் பணிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.10,700 கோடியிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கண்காட்சி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அரசின் சாதனை மலரை வெளியிட்டு, அரசின் நலத் திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினாா். பின்னா், திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சாா்பில், சுமாா் ரூ.10,700 கோடியிலான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா். இந்தக் கண்காட்சி வருகிற 18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரையும், தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெ.திலகவதி, மகளிா்த் திட்ட இயக்குநா் நா.சரவணன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.கொ.நாகராஜபூபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com