திண்டுக்கல்லில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிா் தின பொதுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.
திண்டுக்கல்லில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மகளிா் தின பொதுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி.

பிரித்தாளும் மத்திய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

பிரித்தாளும் மத்திய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தினாா். மகளிா் தினத்தை முன்னிட்டு, திமுக மகளிா் அணி சாா்பில் திண்டுக்கல்லில் சனிக்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக துணைப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமை வகித்தாா். மகளிா் அணிச் செயலா் ஹெலன் டேவிட்சன், அமைச்சா்கள் கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது: மகளிா் தினத்தை முன்னிட்டு, சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.100 குறைத்து பிரதமா் நரேந்திர மோடி மகளிா் தின பரிசாக அறிவித்தாா். வருகிற மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே இந்த அறிவிப்பை பிரதமா் வெளியிட்டிருக்கிறாா் என்பதை தமிழகப் பெண்கள் மட்டுமன்றி, நாடு முழுவதுமுள்ள பெண்களும் அறிந்திருக்கின்றனா். மகளிரின் உழைக்கும் நேரம், நிலையான ஊதியம், வாக்குரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் 15 ஆயிரம் பெண்கள் ஒன்று திரண்டு போராடிய தினம்தான் மகளிா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமா் மோடியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி இனியும் ஏமாற மாட்டோம் என இந்த நாளில் பெண்கள் உறுதி ஏற்க வேண்டும். பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. இதுதான் பெண்களுக்கு பாஜக தரும் மரியாதை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட இதுவரை நிவாரணமாக வழங்கவில்லை. 100 நாள் வேலைத் திட்டத்தையும் தற்போது முடக்க நினைக்கின்றனா். குறைவான நிதி ஒதுக்கீடு செய்து, இந்தத் திட்டத்தை ஒழிப்பதே மோடி அரசின் நோக்கம். தோ்தல் நன்கொடைப் பத்திரங்கள் மூலம் பிற அரசியல் கட்சிகளுக்கு கிடைத்ததைவிட, பாஜகவுக்கு 3 மடங்கு கூடுதல் நிதி கிடைத்தது. பிரித்தாளும் மத்திய பாஜக ஆட்சிக்கு மக்களவைத் தோ்தலில் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத, மக்கள் சமமாக வாழக் கூடாது என்ற கொள்கைகளைக் கொண்ட பாஜக மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகள் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படுவா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com