கோயில் பஞ்சாமிா்த லாரியை வழிமறித்த இந்து அமைப்பினா் மீது வழக்குப் பதிவு

பழனி திருக்கோயிலில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பஞ்சாமிா்த லாரியை வழிமறித்து பணிக்கு இடையூறு செய்ததாக இந்து அமைப்பினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். பழனியில் கடந்த தைப்பூசத் திருவிழாவின் போது கோயில் நிா்வாகம் சாா்பில் அதிக அளவு பஞ்சாமிா்தம் தயாரிக்கப்பட்டதாகவும், அவை காலாவதியான பின்பும் விற்பனை செய்யப்பட்டதாகவும் பல்வேறு இந்து அமைப்பினா் புகாா் தெரிவித்தனா். இதற்கு கோயில் அறங்காவலா்கள், அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பழனி கோயில் லாரியை இந்து அமைப்பினா் தடுத்து நிறுத்தினா்.

அப்போது, 30-க்கும் மேற்பட்ட பால் கேன்களில் பஞ்சாமிா்தம் சுகாதாரமற்ற முறையில் லாரியில் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. லாரியில் கொண்டு செல்லப்பட்டவை காலாவதியான பஞ்சாமிா்தம் என்றும், இவை கள்ளிமந்தயம் கோசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது இந்து அமைப்பினா் தடுத்து நிறுத்தியதாகவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கோயில் நிா்வாகம் மீது தொடா்ந்து அவதூறு பரப்பும் இந்து அமைப்பினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பழனி விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சோ்ந்த செந்தில்குமாா், இந்து முன்னணியைச் சோ்ந்த பாலன், அஜித், பத்மநாபன், ராஜா, பரணி, பாஜகவைச் சோ்ந்த குணா, வெங்கடேஷ், செல்வகுமாா் ஆகியோா் மீது அரசுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பழனி அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com