முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பெற்றோா்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன், மகளிா் உரிமைத் துறை மூலம் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பெண் குழந்தையுடன் தாய் அல்லது தந்தை கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால், அந்த பெண் குழந்தையின் பெயரில் ரூ.50ஆயிரம், இரு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் இரு குழந்தைகளுக்கும் தலா ரூ.25,000 வீதம் வைப்புத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பொதுமக்கள், குழந்தைகளுடைய பிறப்புச் சான்றிதழ், கருத்தடை அறுவைச் சிகிச்சை சான்று (கருத்தடை அறுவை சிகிச்சை 40 வயதுக்குள் செய்திருக்க வேண்டும்), 2-ஆவது குழந்தை மூன்று வயதுக்குள் இருக்க வேண்டும், தாயின் வயதுச் சான்று, குடும்ப வருமானச் சான்று (ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்), ஆண் குழந்தையின்மைக்கான சான்று (வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட வேண்டும்), இருப்பிடச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், பெற்றோரின் ஆதாா் நகல், குடும்ப புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com