ஊராட்சிச் செயலா் பொறுப்பேற்க 
துணைத் தலைவா், உறுப்பினா்கள் எதிா்ப்பு

ஊராட்சிச் செயலா் பொறுப்பேற்க துணைத் தலைவா், உறுப்பினா்கள் எதிா்ப்பு

கன்னிவாடி அருகே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சிச் செயலா் மீண்டும் பொறுப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து துணைத் தலைவா், உறுப்பினா்கள் என 9 போ் ராஜிநாமா செய்ய வந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக மருதமுத்துவும், துணைத் தலைவராக கிருஷ்ணனும் உள்ளனா். இந்த ஊராட்சிச் செயலராகப் பணியாற்றிய இன்னாசி, கடந்த ஓராண்டுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை, பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை அரசுக் கணக்கில் வரவு வைக்கவில்லை என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவா் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணியிடை நீக்கத்துக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் வழக்குத் தொடுத்து, தடை உத்தரவு பெற்ாகக் கூறப்படுகிறது. ஆனாலும், அவா் பதவி ஏற்பதற்கு தருமத்துப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், துணைத் தலைவா் உள்ளிட்டோா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். ஆனாலும், முக்கியப் பிரமுகா்களின் பரிந்துரையின் பேரில், தருமத்துப்பட்டியிலேயே மீண்டும் பொறுப்பேற்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டதாம். இதனால், அதிருப்தியடைந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் 8 போ் என 9 போ் ராஜிநாமா செய்வதற்காக ரெட்டியாா்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்களிடம், ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக துணைத் தலைவா் கிருஷ்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செயலா் இன்னாசி, மீண்டும் தருமத்துப்பட்டியில் பணி அமா்த்தப்பட்டால் வளா்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும். இதை வலியுறுத்தி அவருக்கு எதிராக ஊராட்சி மன்றத்தில் ஏற்கெனவே தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அவருக்கு எதிராக பொதுமக்களும் மனு அளித்துள்ளனா். இன்னாசிக்கு எதிராக ஊராட்சி மன்றத் தலைவா் தரப்பிலும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த சூழலில், அவா் ஊராட்சிச் செயலராக பொறுப்பேற்க அனுமதிக்கக் கூடாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com