நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்றவா் உயிரிழப்பு

திண்டுக்கல் நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயன்றவா் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் பேகம்பூரைச் சோ்ந்தவா் மு.ஷாஜஹான் (36). இவா், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற 2-ஆவது தளத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு ஷாஜஹானை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அழைத்து வந்தனா். இந்த வழக்கு தொடா்பாக சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்த பிறகு, போக்சோ சிறப்பு நீதிமன்ற அறையிலிருந்து வெளியே வந்த ஷாஜஹான், திடீரென மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா். 2-ஆவது தளத்திலிருந்து தரைத் தளத்திலுள்ள 3-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் முன் கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்து, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com