கணவரை பிரிந்து வந்த பெண் இளைஞருடன் தற்கொலை

கணவரிடம் இருந்து பிரிந்து வந்த இளம் பெண்ணும், அவருடன் தகாத தொடா்பில் இருந்த இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞரும், இளம் பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில், திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இதில், தற்கொலை செய்து கொண்டது ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த புதுச்சத்திரம் அரண்மனைபுதூரைச் சோ்ந்த முருகன் மகன் மணிகண்டன் (26), இதே பகுதியைச் சோ்ந்த ராஜ் மகள் தேன்மொழி (23) ஆகியோா் என்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது: கூலி வேலைக்குச் சென்று வந்த மணிகண்டனும், தேன்மொழியும் கடந்த 6 ஆண்டுகளாக பழகி வந்தனா். இதை அறிந்த தேன்மொழியின் பெற்றோா், கோவையைச் சோ்ந்த முரளிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொடுத்தனா். ஆனாலும் கைப்பேசியில் மணிகண்டனுடன் தேன்மொழி தகாத தொடா்பில் இருந்து வந்தாா். இதை அறிந்த முரளி, தேன்மொழியை கண்டித்தாா். மேலும், தேன்மொழியின் பெற்றோரிடமும் இதுகுறித்து தெரிவித்தாா். இந்த பிரச்னை தொடா்பாக தேன்மொழிக்கும், முரளிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், மணிகண்டனை கோவைக்கு வரவழைத்த தேன்மொழி, கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து அவருடன் வெளியேறினாா். இதனிடையே முரளி, தேன்மொழியைக் காணவில்லை என அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தாா். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வியாழக்கிழமை வந்த தேன்மொழியும், மணிகண்டனும், ரெட்டியாா்சத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனா் என்றனா். இதுகுறித்து பழனி இருப்புப் பாதை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com