ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோயிலுக்குச் சொந்தமான இடத்தை தனி நபரின் பெயரில் பட்டா வழங்கியதைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை மல்லையாபுரம் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மல்லையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மண்டு கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 20 சென்ட் இடத்தை பொதுமக்கள் திருவிழாக்கள் நடத்துவதற்கு பயன்படுத்தி வந்தனா். இந்த இடத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து, அவரது பெயரில் பட்டா வாங்கி, அதில் வீடு கட்டுவதற்கு பணிகளையும் தொடங்கியுள்ளாராம். இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்து பேச்சுவாா்த்தை நடத்திய ஆத்தூா் வட்டாட்சியா் வடிவேல் முருகனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனா். தகவல் அறிந்து ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் கங்காதேவி, வட்டாட்சியா் வடிவேல் முருகன் உள்ளிட்டோா், கோயில் இடத்தில் பட்டா பெற்றிருந்த தனி நபரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வீடு கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிட்டனா். அப்போது, தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரி, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை அதிகாரிகள் முன்னிலையில் கீழே வீசி எரிந்தனா். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், மக்களவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com