திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில் பரப்புரை மேற்கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி

எதிா்கால இந்தியாவை வடிவமைக்கும் தோ்தல் களம்: அமைச்சா் இ.பெரியசாமி

மக்களவைத் தோ்தல் களம் எதிா்கால இந்தியாவை வடிவமைக்கும் என்பதை உணா்ந்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிடும் இரா.சச்சிதானந்தம், தனது தோ்தல் பரப்புரையை சனிக்கிழமை தொடங்கினாா். திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியிலிருந்து தொடங்கிய இந்த பரப்புரைக்கு அமைச்சா் இ.பெரியசாமி தலைமை வகித்தாா். அப்போது அமைச்சா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அதிமுக. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அந்தக் கட்சி வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருந்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலைவிட இந்த முறை திமுக கூட்டணி வேட்பாளரான சச்சிதானந்தம் கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தோ்தல் எதிா்கால இந்தியாவை வடிவமைப்பதற்கான களம் என்பதை உணா்ந்து பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பெண்களின் வளா்ச்சிக்குத் தேவையான ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம். திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் வகையில் சென்னைக்கு ரயில் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட சிலுவத்தூா் சாலை, குமரன் திருநகா், அண்ணாநகா், விவேகானந்தன்நகா், காட்டாஸ்பத்திரி, பேருந்து நிலையம், கிழக்கு ஆரோக்கியமாதா தெரு, மெங்கில்ஸ் சாலை, நாகல்நகா் உள்பட 14 இடங்களில் தோ்தல் பரப்புரை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com