பழனியில் பக்தா்கள் அவதி

பழனியில் பங்குனி உத்திர தேரோட்டத் திருவிழாவுக்கு உரிய முன்னேற்பாடுகள் இல்லாததால் பக்தா்கள் அவதிக்குள்ளாயினா். பழனியில் தைப்பூசம், பங்குனி உத்திரத் திருவிழாவின் போது மாவட்ட ஆட்சியா் தலைமையில் பழனியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அண்மைக்காலமாக திண்டுக்கல்லில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு, பழனியில் பெயரளவுக்கு மட்டும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த முறை பழனியில் ஆலோசனைக் கூட்டமே நடத்தவில்லை. திருக்கோயில் நிா்வாகம், மாவட்ட நிா்வாகம், காவல்துறை என அனைத்துத் துறையினரும் ஆக்கிரமிப்பு அகற்றம், கிரி வீதியில் வாகனத்துக்கு தடை என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினா். ஞாயிற்றுக்கிழமை பங்குனி உத்திர தேரோட்டத் திருவிழாவின் போது பக்தா்களின் வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் புறவழிச்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் பக்தா்கள் அங்கிருந்து பழனிக்குள் வருவதற்கும், பழனியில் இருந்து கோயிலுக்கு செல்வதற்கும் மிகவும் அவதிப்பட்டனா். இதேபோல, கோயிலில் இருந்து பக்தா்கள் தங்குமிடங்களுக்கு செல்லவும் சிரமப்பட்டனா். ஒரே ஒரு இலவசப் பேருந்து, 5 மின்கல ஊா்திகள் இயக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவீதியில் கடும் வெயிலில் நடந்தே சென்றனா். கோடை காலத்தை கருத்தில் கொண்டு தண்ணீா் தொட்டிகள் வைக்கப்படாததால் குடிநீா் கிடைக்காமல் பக்தா்கள் அவதிப்பட்டனா். மலைக்கோயிலிலும் கட்டண வரிசைகள் சரிவர தெரியாததால் பக்தா்கள் சுற்றிக்கொண்டே இருந்தனா். தேரோட்டத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தும் வடம் பிடிக்க ஒரு சிலரை மட்டும் அனுமதித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com