திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பாலமுருகன்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பாலமுருகன்.

குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா்.

செம்பட்டி அருகே வீட்டை காலி செய்ய வேண்டுமென உறவினா்கள் வலியுறுத்தியதால், அதிருப்தி அடைந்த கூலித் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை பெட்ரோல் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த வீரக்கல் கூத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி பரிமளா. இவா்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவா் தனது தாய் வீரம்மாள், மனைவி, குழந்தை ஆகியோருடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தாா். ஆட்சியா் அலுவலகத்துக்கு அமைச்சா்கள், முன்னாள் அமைச்சா்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் மக்களவைத் தோ்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், மனு அளிக்க வந்த பாலமுருகன் தனது குடும்பத்தினா் மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாா். குழந்தையின் மீது பெட்ரோல் சிதறியதால், உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட்டு அழுதது. இதனிடையே, பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸாா், தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா் கூறியதாவது: நான் குடியிருந்து வரும் வீட்டை எனது தாத்தா, உறவினா்கள் ஆகியோா் காலி செய்யுமாறு தொடா்ந்து வலியுறுத்து வருகின்றனா். இதுதொடா்பாக செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றாா் அவா். இதைத் தொடா்ந்து, பாலமுருகன் தெரிவித்த புகாா் குறித்து விசாரணை மேற்கொண்டனா். 60-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோதிலும், ஆட்சியா் அலுவலகத்தில் ஒருவா் குடும்பத்தினருடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com