வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் 
தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சிக்குள்பட்ட சத்யா குடியிருப்பு, கோவில்பட்டி, ரெட்டியாா்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிக்கு சுமாா் 15 கி.மீ. தொலைவில் உள்ள அல்லிஓடையிலிருந்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இதனால் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இது குறித்து ஒன்றியக்குழு உறுப்பினா் தேரடி முத்துகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் அல்லி ஓடையில் தண்ணீா் இல்லை. இதனால் வில்பட்டி ஊராட்சி நிா்வாகம் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வில்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான அல்லி ஓடைப் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும். மேலும், அல்லி ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பகுதியில் தனியாா் சிலா் சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிா்வாகத்திடமும், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதே நிலை நீடித்தால் வில்பட்டி ஊராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com