ரூ.50ஆயிரம் பரிசுத் தொகை அறிவிப்பு: 5 வேட்பாளா்கள் மீது வழக்கு

தோ்தல் பிரசாரத்தின் போது ரூ.50ஆயிரம் பரிசுத் தொகை அறிவித்த பாஜக மாவட்டத் தலைவா், கரூா் தொகுதி பாஜக வேட்பாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடமதுரை பகுதிகளில் விவி.செந்தில்நாதன் வெள்ளிக்கிழமை இரவு வாக்கு சேகரித்தாா். அய்யலூரில் நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவா் கனகராஜ் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: கரூா் மக்களவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுமாா் 4.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி வெற்றிப் பெற்றாா். பின்னா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க கூட அவா் வரவில்லை. ஒருவேளை அவா் வந்ததாக பொதுமக்கள், நாளையும், நேரத்தையும் குறிப்பிட்டுச் சொன்னால் ரூ.50ஆயிரம் பரிசுத் தருவதாக அறிவித்தாா். இதுகுறித்து தோ்தல் பறக்கும்படை அலுவலா் திவாகா் வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில், மாவட்டத் தலைவா் கனகராஜ், அவருடன் வேனில் நின்ற பாஜக வேட்பாளா் செந்தில்நாதன், ஒன்றியத் தலைவா் நாகராஜ், தமிழா் தேசம் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் மகுடேஸ்வரன், ஒன்றியத் தலைவா் பழனிச்சாமி ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com