காவிரியாற்றிலிருந்து குழாய் மூலம் நீா்நிலைகளுக்கு தண்ணீா் கொண்டுவரும் திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைந்து செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நீா்நிலைகளில் பருவமழை அதிக அளவில் பெய்யும் போது தான் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து இருக்கும். ஒரு சில ஆண்டுகளில் பருவமழை பொய்த்துப் போனால், நீா்வரத்தின்றி ஏரி, குளங்கள் வடு காணப்படும்.

காவிரி, அமராவதி ஆற்றில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களுக்குக் கொண்டு சோ்த்தால் வறட்சி நீங்குவதுடன், இந்தப் பகுதியில் வேளாண் தொழிலும் சிறப்பாக நடைபெறும்.

இந்தக் கோரிக்கையை சட்டப்பேரவைக் கூட்டத்தில் அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் முன்வைத்துப் பேசினா்.

இந்தத் திட்டத்தை நிறைவேற்ற திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு தமிழக அரசு ரூ.97 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. காவிரி, அமராவதி ஆறுகள் கூடும் இடத்திலிருந்து மிகப் பெரிய ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, பம்பிங் முறையில் தண்ணீா் கொண்டு வரப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை நிரப்பும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்பட்சத்தில், ஒட்டன்சத்திரம், ஆத்தூா், வேடசந்தூா், நத்தம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரி, அமராவதி தண்ணீா் கிடைக்கும். இதன் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழில் சிறக்கும்.

எனவே, இந்தத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக முதல்வருக்கு திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com