கொடைக்கானலில் பிளம்ஸ் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் விலை அதிகரிப்பு

கொடைக்கானல் பள்ளங்கி பகுதியில் விளைந்த பிளம்ஸ் பழங்களை தரம் பிரித்த தொழிலாளா்கள்.

கொடைக்கானலில் மழை இல்லாததால், பிளம்ஸ் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஆரஞ்சு, கொய்யா, பிளம்ஸ், பீச்சஸ், பட்டா்புரூட், பலா, ஸ்டாா் புரூட்ஸ், வாழை உள்ளிட்ட பழ வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பழங்கள் சீசன் காலங்களில் மட்டுமே விளையக்கூடியவை.

கொடைக்கானலில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் மட்டுமே பிளம்ஸ் விளையும் காலம். ஆனால், கடந்த 2 மாதங்களாக மழையில்லாததால், பிளம்ஸ் விளைச்சல் வெகுவாகக் குறைந்தது.

அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை, வில்பட்டி, செண்பகனூா், நெல்லிவரை, பிரகாசபுரம், வட்டக்கானல், அட்டக்கடி, சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், நாயுடுபுரம், அப்சா்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்தப் பழம் சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு விளையும் பிளம்ஸ் பழங்கள் மதுரை, சென்னை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளத்துக்கும் அனுப்பப்படுகின்றன.

மே மாதம் கொடைக்கானலுக்கு அதிகளவில் வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தப் பழத்தை அதிக அளவில் வாங்கிச் செல்வா்.

இந்த நிலையில், கொடைக்கானலில் பிளம்ஸ் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இதனால், விலையும் சற்று அதிகரித்துள்ளது. வழக்கமாக பிளம்ஸ் நல்ல விளைச்சல் இருந்தால், கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், தற்போது ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் பழ வியாபாரிகள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் பிளம்ஸ் பழ மரங்களை ஊடு பயிராக வளா்த்து வருகின்றனா். ஆண்டுக்கு 3 மாதங்கள் மட்டுமே விளையக்கூடியவை. நிகழாண்டில் மழை இல்லாததால், பிளம்ஸ் விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்துள்ளது என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com