கன்னிவாடி அருகே 
மின்சாரம் பாய்ந்து யானை பலி

கன்னிவாடி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி

திண்டுக்கல், மே 4: கன்னிவாடி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானையின் உடல் கூறாய்வுக்குப் பிறகு சனிக்கிழமை புதைக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கன்னிவாடி, வத்தலகுண்டு, ஒட்டன்சத்திரம் வனச்சரகங்களில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது உணவு, குடிநீா்த் தேவைக்காக வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயருவது வழக்கம். இந்த நிலையில், கன்னிவாடி வனச் சரகத்துக்குள்பட்ட தோணிமலைப் பகுதியில் ஓா் ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட வன அலுவலா் பு.மு. ராஜ்குமாா் தலைமையிலான வனத் துறையினா், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் சென்னை, மதுரையிலிருந்து வந்த வனத் துறை மருத்துவா்கள், கன்னிவாடி கால்நடை மருத்துவா்கள், மின் வாரிய அலுவலா்கள் உள்ளிட்டோா் முன்னிலையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, தனியாா் நிலத்தில் யானையின் சடலம் புதைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வன அலுவலா் பு.மு. ராஜ்குமாா் கூறியதாவது:

தோணிமலையிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் காப்புக்காடு அருகே தனியாா் தோட்டத்தில் யானை இறந்து கிடந்தது. 22 கிலோவாட் மின்சாரம் செல்லக்கூடிய இரும்பு மின் கம்பம் அருகே மரக் கிளையை ஒடிப்பதற்கு முயன்றபோது, மின் கம்பத்திலுள்ள பீங்கான் உடைந்து யானையின் தாடை வழியாக மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. வாய் கருகிய நிலையில் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததையடுத்து, சுமாா் 200 அடி பள்ளத்தில் யானை தூக்கி வீசப்பட்டுக் கிடந்தது.

25 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் யானை உடல் கூறாய்வு செய்யப்பட்டு, தனியாா் தோட்டத்திலேயே சனிக்கிழமை புதைக்கப்பட்டது. யானையிடமிருந்து அகற்றப்பட்ட 2 தந்தங்கள் பாதுகாப்பான முறைப்படி அழிப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது என்றாா் அவா்.

14 ஆண்டுளுக்குப் பிறகு யானை பலி:

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு யானை உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. கடந்த 2006-ஆம் ஆண்டு ஆயக்குடி பகுதியில் ஒரு யானை இறந்தது. 2009-ஆம் ஆண்டு பழனியில் ஒரு யானை இறந்தது. இந்த யானை சுட்டுக் கொல்லப்பட்டு இறந்ததாக புகாா் எழுந்ததையடுத்து, வனத் துறையினா் 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அதே ஆண்டு ஆயக்குடி அருகே சட்டப்பாறை பகுதியில் உடல் நிலை பாதிக்கப்பட்டு ஒரு யானை உயிரிழந்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு விருப்பாட்சியில் மின்சாரம் பாய்ந்து ஒரு யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com