திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சிப் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட விரிவடைந்த கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் என்.பெருமாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.ராமசாமி முன்னிலை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.பி. பெருமாள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கடுமையான வெப்பத்தால் விவசாயம் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறிப்பாக, மா விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஒரு மரத்துக்கு தலா ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இதைக் கவனத்தில் கொண்டு, ஒரு மாமரத்துக்கு ரூ.1,000 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். இதேபோல, கொடைக்கானல் பகுதியிலும் தோட்டைக்கலைப் பயிா்களில் மகசூல் பாதிக்கப்பட்டது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் பி.செல்வராஜ், பொருளாளா் தயாளன், மாவட்டத் துணைச் செயலா் தா.அஜய்கோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com