பழனி மலைச் சாலையில் விழுந்த பாறை

பழனி மலைச் சாலையில் விழுந்த பாறை

பழனி/ கொடைக்கானல், மே 4: மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால், பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை பாறை உருண்டு விழுந்தது.

கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாரல் மழை பெய்தது. இதனால், மலைப் பகுதிகளில் குளிா்ந்த சூழல் நிலவியது.

பழனி-கொடைக்கானல் மலைச் சாலையில் சவரிக்காடு அருகே மழையால் நனைந்து காணப்பட்ட பாறை சனிக்கிழமை மாலை உருண்டு விழுந்தது. அந்த நேரத்தில் வாகனங்கள் ஏதும் அந்த வழியாகச் செல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதேபோல, சவரிக்காடு பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் அந்த வழியாக வந்த 2 காா்கள் மீது விழுந்தது. இதில் காா்கள் சேதமடைந்த நிலையில், அதில் வந்த சுற்றுலாப் பயணிகள் காயமின்றி தப்பினா்.

இதனால், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அந்த வழியாக வாகனங்களில் வந்தவா்கள் சாலையில் சிதறிக் கிடந்த பாறைத் துண்டுகளையும், மரத்தையும் அகற்றினா். இதையடுத்து, அந்தப் பகுதியில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.

சாலையோரத்தில் கிடக்கும் பெரிய பாறை ஞாயிற்றுக்கிழமை (மே 5) இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு, அப்புறப்படுத்தப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com