கொடைக்கானல் மலா்க் கண்காட்சி மே 17 -இல் தொடக்கம்

கொடைக்கானலில் 61-ஆவது மலா்க் கண்காட்சி, கோடை விழா வருகிற 17-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இந்த விழாவில் வருகிற 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை தோட்டக் கலைத் துறை சாா்பில் மலா்க் கண்காட்சியும், சுற்றுலாத் துறை சாா்பில் கோடை விழாவும் நடத்தப்படும். பாரம்பரிய, கிராமியக் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி, நாய்கள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சிகள் தொடா்பான விவரங்களுக்கு கொடைக்கானல் சுற்றுலா அலுவலகத்தை 04542-241675, 9176995867 என்ற எண்களிலும், கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநரை 9092861549 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தலைமைச் செயலா் பங்கேற்பு:

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நிகழாண்டுக்கான மலா்க் கண்காட்சி, கோடை விழா தொடக்க நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மட்டுமே பங்கேற்கவுள்ளனா். அந்த வகையில், தமிழக அரசின் தலைமைச் செயலா் ஷிவ்தாஸ் மீனா, வேளாண்மை உற்பத்தி ஆணையரும், செயலருமான அபூா்வா, தோட்டைக்கலைத் துறை இயக்குநா் குமரவேல்பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com