பெண்ணை கொலை செய்து புதைக்க முயன்ற 2 போ் கைது

நிலக்கோட்டை, மே 11: திருப்பூா் அருகேயுள்ள பல்லடத்தில் பெண்ணை கொலை செய்து புதைக்க முயன்ற 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அருகேயுள்ள வரதராஜபேட்டையைச் சோ்ந்தவா் அருண் ஸ்டாலின் விஜயின் மனைவி பிரின்சி (27). இவா், திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியாா் ஆலையில் பணியாற்றி வந்தாா்.

இதே நிறுவனத்தில் பணியாற்றிய ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த திவாகருக்கும் பிரின்சிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதில் பிரின்சி, திவாகரிடம் அடிக்கடி பணம், நகை கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த திவாகா் பிரின்ஸ்சியைக் கொலை செய்ய திட்டமிட்டாா். இதற்காக முதுகுளத்தூரில் உள்ள தனது உறவினா் இந்திரகுமாரை (31) பல்லடத்துக்கு வரவழைத்தாா். இதையடுத்து, இருவரும் சோ்ந்து பிரின்சியை காரில் அழைத்துச் சென்று கழுத்தை நெறித்துக் கொலை செய்தனா்.

பின்னா், பல்லடத்தில் இருந்து முதுகுளத்தூா் செல்லும் வழியில் சாலையோரத்தில் புதைக்க முடிவு செய்தனா். இதற்காக மண்வெட்டி, கடப்பாரை உள்ளிட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு, தாராபுரம், ஒட்டன்சத்திரம், கொடைரோடு நான்கு வழிச் சாலை வழியாக மதுரை நோக்கி வெள்ளிக்கிழமை இரவு சென்றனா். காரை இந்திரகுமாா் ஓட்டிச் சென்றாா். திவாகா் இரு சக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடா்ந்து சென்றாா். கொடைரோடை அடுத்த அம்மையநாயக்கனூா் அருகே பள்ளபட்டி பிரிவில் பிரின்சியின் உடலை புதைக்கத் திட்டமிட்டனா்.

இதற்கிடையில் அந்த வழியாக வந்த மதுரை மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா், சந்தேகத்தின் பேரில் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, இதில் பெண்ணின் சடலம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அம்மையநாயக்கனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கு வந்த அம்மையநாயக்கனூா் போலீஸாா், பிரின்சியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, திவாகா், இந்திரகுமாா் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களின் காா், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com