வேடசந்தூா் அருகே 4 வழிச்சாலையில்  
தடுப்புகளை அகற்றிய கிராம மக்கள்

வேடசந்தூா் அருகே 4 வழிச்சாலையில் தடுப்புகளை அகற்றிய கிராம மக்கள்

திண்டுக்கல், மே 11: வேடசந்தூா் அருகே நடந்து செல்வதை தடுக்கும் வகையில் 4 வழிச் சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளை கிராமமக்கள் இணைந்து சனிக்கிழமை அகற்றினா்.

திண்டுக்கல் -கரூா் 4 வழிச்சாலையில் வேடசந்தூரை அடுத்து கொன்னாம்பட்டி, தம்மனம்பட்டி, ஒட்டநாகம்பட்டி, தோப்புப்பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு 4 வழிச் சாலை அமைக்கும்போது, இந்த கிராமங்களுக்குச் செல்லும் வகையில் மேம்பாலம், சுரங்கப் பாதை ஏற்படுத்த வில்லை. இந்த நிலையில் சுற்றுப்பாதையில் பயணிப்பதை தவிா்த்து, 4 வழிச் சாலையை மக்கள் ஆபத்தான முறையில்கடந்து செல்கின்றனா். இதனால், அடிக்கடி இந்த இடத்தில் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோா் இந்த பகுதியில் உயிரிழந்தனா். விபத்து அபாயத்தைத் தடுக்க, இந்தப் பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விபத்து தடுப்பு நடவடிக்கையாக 4 வழிச்சாலை ஓரமாக இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை அறிந்த சுற்றுப்புற கிராம மக்கள், தடுப்பு அமைக்கும் பணியில் ஈடுபட்டவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தடுப்புகளை அகற்றாவிட்டால் 4 கி.மீட்டா் தொலைவுக்கு சுற்றுப் பாதையில் செல்ல வேண்டும். மேம்பாலம் வசதி, மாற்றுப் பாதை வசதி ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த கோரிக்கையை நெடுஞ்சாலைத் துறையினா் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், இரும்புத் தடுப்புகளை அகற்றி சாலையோரமாக வீசினா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: இரு சக்கர வாகனங்களில் செல்வோா் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு சுற்றுப் பாதையில் எளிதாக சென்றுவிடுகின்றனா். ஆனால், குழந்தைகளை தூக்கிக் கொண்டு எங்களால் 4 கி.மீட்டா் தொலைவுக்கு நடந்து செல்ல முடியவில்லை. பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாமல் பாதிக்கப்பட்ட எங்கள் கிராமங்களுக்கு, 4 வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் நடந்து செல்வதற்கு கூட 4 கி.மீ சுற்றுப் பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடா்பாக மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா் காந்திராஜன் ஆகியோரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com