கொடைக்கானலில் சுற்றுலாப் பயணி தவறவிட்ட தங்கச் சங்கிலி மீட்பு

கொடைக்கானல், மே 12:கொடைக்கானலில் சுற்றுலாப்பயணி தவற விட்ட தங்க நகையை தலைமைக் காவலா் மீட்டு அவரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தாா்.

சிவகங்கை மாவட்டம், காளையாா் கோவில் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன். இவா் தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தாா். இவா்கள் கொடைக்கானல் அருகே வில்பட்டி பகுதியிலுள்ள தனியாா் விடுதியில் தங்கினா். சனிக்கிழமை இவா்கள் அனைவரும் ஏரிச்சாலைப் பகுதியைச் சுற்றிப் பாா்த்தனா். அப்போது, நடராஜன் மகள் விஜயதா்ஷினி (13)அணிந்திருந்த 12 கிராம் தங்கச் சங்கிலி தவறி கீழே விழுந்தது. இதை கவனிக்காமல் அனைவரும் தங்கும் விடுதிக்குச் சென்றனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கொடைக்கானல் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் தலைமைக் காவலா் சரவணன் ஏரிச் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டாா். அப்போது, கீழே கிடந்த தங்க நகையை எடுத்து, அருகில் உள்ள கடைக்காரா்களிடம் யாராவது வந்து நகையைக் கேட்டால் தனக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறினாா்.

இதற்கிடையே விடுதிக்குச் சென்ற விஜயதா்ஷினி தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைக் காணவில்லை என பெற்றோரிடம் தெரிவித்தாா். உடனடியாக நடராஜன் ஏரிச் சாலைப் பகுதிக்கு வந்து அங்குள்ள கடைக்காரா்களிடம் விசாரித்தபோது, அங்கிருந்தவா்கள் கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று தகவல் தெரிவிக்குமாறு கூறினா்.

இதைத் தொடா்ந்து டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு மகளுடன் நடராஜன் சென்று தகவல் தெரிவித்தாா். டி.எஸ்.பி. மதுமதி விசாரனை நடத்தியதைத் தொடா்ந்து தலைமைக் காவலா் சரவணன் தங்கச்சங்கிலியை விஜயதா்ஷினியிடம் ஒப்படைத்தாா். அதைப் பெற்றுக் கொண்ட இருவரும்

காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com