கஞ்சா கடத்திய இருவா் கைது

திண்டுக்கல், மே 15: மதுரையிலிருந்து கோவைக்கு கஞ்சா கடத்திய முகவா்கள் இருவரை திண்டுக்கல் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் வெங்கடாஜலபதி, உதவி ஆய்வாளா் ராஜகோபால் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே வெளி மாவட்ட பதிவெண் கொண்ட 2 இரு சக்கர வாகனங்களில் 4 போ் வந்தனா். அவா்களை வழிமறிக்க முயன்ற போது, இருவா் தப்பிச் சென்றனா். பிடிப்பட்ட இருவரிடமிருந்தும் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், தூத்துக்குடியைச் சோ்ந்த வேல்முருகன், மதுரையைச் சோ்ந்த பாலா என்பதும், இவா்கள், கோவைக்கு கஞ்சாவை கடத்தும் முகவா்கள் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com