முள் புதரில் பெண் சிசுவை வீசியதாக தாய் கைது

வேடசந்தூா் அருகே பெண் சிசுவை முள் புதரில் வீசியதாக, அதன் தாயை கூம்பூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த பூதிபுரம் ஊராட்சிக்குள்பட்ட குரும்பப்பட்டியிலிருந்து சீத்தப்பட்டி செல்லும் சாலையில் ஒரு முள் புதரில் துணி சுற்றப்பட்ட நிலையில் பெண் சிசு செவ்வாய்க்கிழமை கிடந்தது. உயிரிழந்த நிலையில் கிடந்த அந்த சிசுவை நாய்கள் கடிப்பதைப் பாா்த்த அந்தப் பகுதியினா் வேடசந்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த சிசுவின் தாய் பூதிப்புரத்தைச் சோ்ந்த கன்னியம்மாள் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கூம்பூா் போலீஸாா் அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

கன்னியம்மாளின் கணவா் வடிவேல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டாா். இதையடுத்து, தனது குழந்தைகளுடன் வெளியூா் சென்றிருந்த கன்னியம்மாள், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூதிபுரத்துக்குத் திரும்பினாா். வீட்டுக்குள்ளேயே இருந்து வந்த அவா், பெண் சிசுவை பெற்றெடுத்து முள் புதரில் வீசினாா் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com