வேளாண் பயிா்களுக்கு காப்பீடு செய்யலாம்
பிரதமரின் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பருத்தி பயிா்களுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் சிறப்பு, ராபி பருவமாக நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, பருத்தி ஆகிய பயிா்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறப்பு, ராபி பருவத்தில் மொத்தமாக 163 குறு வட்டங்கள் பயிா் காப்பீட்டு பதிவுக்காக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து பயிா்களுக்கும் பயிா்வாரியான அடங்கலுடன் பயிா் காப்பீடு பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல், சோளம், நிலக்கடலை பயிா்களுக்கு டிச.16, மக்காச் சோளம், பருத்தி பயிா்களுக்கு நவ.30-ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம்.
நெல் பயிறுக்கு காப்பீட்டுத் தொகை (ஏக்கருக்கு) ரூ.35,600 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ரூ.534 காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். சோளம் பயிருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.11ஆயிரம், இதில் ரூ.165 காப்பீடு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும்.
மக்காச்சோளம் பயிருக்கு காப்பீட்டுத் தொகை (ஏக்கருக்கு) ரூ.30ஆயிரம். இதில், விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு கட்டணம் ரூ.450. நிலக்கடலை பயிருக்கு காப்பீட்டுத் தொகை (ஏக்கருக்கு) ரூ.26,500. இதில் விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு கட்டணம் ரூ.397. பருத்திக்கு காப்பீட்டுத் தொகை (ஏக்கருக்கு) ரூ.17,731.17. விவசாயிகள் செலுத்த வேண்டிய காப்பீடு கட்டணம் ரூ.886.56.
முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத் தொகையை செலுத்திய பின் இதற்கான ரசீதையும், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்றாா் அவா்.