பழனியில் விவசாய கண்காட்சி தொடக்கம்
பழனி இட்டேரி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் குட்லயன்ஸ் அரிமா சங்கம் சாா்பில் விவசாய கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு பட்டயத் தலைவா் அரிமா அப்துல்சலாம் தலைமை வகித்தாா். பிபிஎன் மருத்துவமனை மருத்துவா் விமல்குமாா், சாய்கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், ஆா்விஎஸ் மஹால் அசோக் ஆகியோா் கண்காட்சியை தொடங்கி வைத்தனா். இந்தக் கண்காட்சியில் விவசாயப் பொருள்கள், விவசாய இயந்திரங்கள், மாடித் தோட்ட விதைகள், தானியங்கள், பால்பண்ணை பொருள்கள், உணவுப் பொருள்கள், கால்நடை தீவனங்கள், கால்நடை வளா்ப்பு குறித்த பல்வேறு கடைகள் இடம்பெற்றிருந்தன.
இதில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மானியங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதில், விவசாயிகளுக்கு 2,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பழனி, ஆயக்குடி, கணக்கன்பட்டி, புளியம்பட்டி, நெய்க்காரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான விவசாயிகள் கண்காட்சியில் கலந்து கொண்டு பயனடைந்தனா். இந்தக் கண்காட்சி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள் நடைபெறுகிறது.