கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க கோரி ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கத்தினா் மனு

கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க கோரி ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கத்தினா் மனு

Published on

ஒட்டன்சத்திரத்தில் வணிகா்களையும், பொதுமக்களையும் பாதிக்கும் வகையில் கூடுதல் வரிவிதிப்பை நிறுத்தி வைக்க வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் நகர ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகர ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கத்தினா் நகராட்சி ஆணையா் ஸ்வேதாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

பழையக் கட்டடங்களை அளந்து விதிக்கப்படும் புது வரிவிதிப்பை தவிா்த்து பழைய வரிமுறையை தொடர வேண்டும். சொத்து வரியை வருடம் தோறும் 6 சதவீதம் கூட்டும் முடிவை மாற்றி பழைய வரிமுறையை தொடர வேண்டும். சொத்து வரிக்கு விதிக்கப்படும் அபராத தொகையை நிறுத்தி வைக்க வேண்டும். உணவுப் பொருள் சாா்ந்த துறையை தவிர மற்ற துறை வியாபாரிகளுக்கு விதிக்கப்படும் உரிமை கட்டணத்தை நிறுத்தி வைத்து தொழில் வரியை மட்டும் விதிக்க வேண்டும். காலி இடத்துக்கு விதிக்கப்படும் வரியை நிறுத்தி வைக்க வேண்டும். வணிக நிறுவனங்களில் வேலை செய்பவரின் எண்ணிக்கை கணக்கீட்டு அதன் அடிப்படையில் வரி விதிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

மனு அளிக்கும் போது நகா்மன்ற தலைவா் கே.திருமலைசாமி, துணைத் தலைவா் ப.வெள்ளைச்சாமி, நகராட்சி பொறியாளா் சுப்பிரமணிய பிரபு, சுகாதார ஆய்வாளா் ராஜ்மோகன்,வருவாய் ஆய்வாளா் விஜய்பால்ராஜ் நகர ஒருங்கிணைந்த வா்த்தகா் சங்கத்தலைவா் கே.சுப்பிரமணி, சங்க செயல் தலைவா் வஞ்சிமுத்து, செயலா் தணிக்காசலம், பொருளாளா் முகமதுமீரான், செய்திதொடா்பாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.